எல்-நினோ காரணமாக வறட்சி ஏற்படும் என்ற அச்சம் தற்போது தேவையில்லை
தற்போதைய வானிலை நிலவரம் பலருக்கு மழை குறித்து சந்தேகத்தையும், வறட்சி குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால், இது முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்ட ஒரு வானிலை அமைப்பாகும். இதற்கான காரணங்களும், அடுத்தடுத்த மாற்றங்களும் நமது நீண்டகால வானிலை கணிப்புகளில் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளன.
உலக வானிலை ஆய்வு நிறுவனம்.(WMO) மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD ) உலக வானிலை மாதிரிகள் அனைத்துமே வறட்சி வரும் என்று தொடர்ந்து எச்சரிக்கை வழங்கி வருகிறது. ஆனால் நம்முடைய அனைத்து காரணிகளின் படி கீழ்கண்ட ஆய்வறிக்கையை நீண்ட காலமாக உறுதியாக தெரிவிக்கிறேன்.
தற்போது வங்கக்கடலில் ஒடிசா–மேற்கு வங்கம் கடலோரப் பகுதியில் ஒரு தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த சில நாட்களில் வட இந்திய நிலப்பகுதிக்குள் நகரும். இதன் தாக்கமாக ஜூலை 17 முதல் தமிழ்நாட்டில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றுகள் இணையும் சூழல் உருவாகும். இந்த காற்று இணைவால் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பச்சலனத்தால் இடியுடன் கூடிய மழை ஆங்காங்கே ஆங்காங்கே பெய்யும்.
ஜூலை 17 முதல் 24 வரை
சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள்பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பச்சலன மழை பரவலாக பதிவாகும்.
ஜூலை 17 முதல் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும்.
ஜூலை 24 வரை மாநிலத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மாலை, இரவு இடிமழை கூடுதல் பரப்பில் தொடரும்.
ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 10 வரை
தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வலுப்பெறும்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெப்பச்சலன மழை சற்று தீவிரமடைந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இந்த காலகட்டம் மழை நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்.
ஆகஸ்ட் மாத நிலவரம்
ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 3 வரை சூரியனின் செங்குத்துக் கதிர்கள் தமிழ்நாட்டின் மீது விழுந்து பின்னர் தெற்கு நோக்கி நகரும். இதனால் வானிலை மாற்றங்கள் இயல்பாக நடைபெறும்.
ஆகஸ்ட் 15 முதல் தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும். குறிப்பாக ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை அதிகரிக்கும்.
செப்டம்பர் முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை
செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 17 வரை சுமார் ஒன்றரை மாதங்கள் அணைகளை நிரப்பும் அளவிற்கு பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கோவா, கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை காரணமாக பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
குறிப்பாக செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை தென் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை மிகவும் வலுவாக இருக்கும். இந்த காலத்தில் பல அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்படும் சூழல் உருவாகலாம். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவில் வெள்ளப்பெருக்கு அபாயமும் இருக்கலாம்.
தமிழ்நாட்டிலும் இந்தக் காலத்தில் தென்மேற்கு பருவமழை, மதியம் மற்றும் மாலை நேர வெப்பச்சலன மழை, பின்னர் அக்டோபர் 18 முதல் தொடங்கும் வடகிழக்கு பருவமழை ஆகியவற்றால் குறுவை நெல் அறுவடை உள்ளிட்ட விவசாயப் பணிகள் சில இடங்களில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழை (2026 அக்டோபர் 18 – 2027 ஜனவரி 10)
இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நல்ல மழை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். மழை பெய்யும் நாட்கள் அதிகமாகவும், மழைக்கு இடையிலான இடைவெளி குறைவாகவும் இருக்கும். சிறிய வானிலை நிகழ்வுகள்கூட குறிப்பிடத்தக்க மழையைத் தரக்கூடும். சில வலுவான மழை நிகழ்வுகளும் ஏற்படலாம். குறிப்பாக குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்யும் நிகழ்வுகள் அதிகமாக இருக்கலாம்.
மொத்தத்தில், தற்போதைய நீண்டகால வானிலை அறிகுறிகளின்படி எல்-நினோ காரணமாக கடுமையான வறட்சி ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. மாறாக, ஜூலை பிற்பகுதி தொடங்கி தென்மேற்கு மற்றும் பின்னர் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டும் தமிழ்நாட்டிற்கு நல்ல மழையை வழங்கும் வாய்ப்பு இருப்பதாக நம்முடைய நீண்ட கால கணிப்பின் படியே தற்போதைய நம்முடைய கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
ந. செல்வகுமார்
வானிலை ஆய்வாளர்
15.7.2026.
